Friday, December 24, 2010

ப்ரியா,……வெட்கப்பட்டாள்

“இப்ப அவ காலேஜ் பஸ்ல வந்துகிட்டிருக்காளாம். நம்ம ஸ்டாப்புல அவ இறங்குனதும் நீயா போய் அவகிட்ட பேசுறயா இல்ல, அவளே வந்து பேசணுமான்னு ப்ரியா கேக்குறா”.
பேசுறதெல்லாம் பேச்சாகாதுங்க‌.
அடுத்தவன் கதைய கேட்டு சும்மா பொறாமபடாதீங்க‌.
பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.
இப்ப என் கதைய கேளுங்க….
அது, ஒரு அழகிய UG காலம்.
ப்ரியா, எங்க காலனி பொண்ணு.
ப்ரியா = ஈகோ : சேட்ட.
(அதென்னமோ, ப்ரியான்னு பேரு இருக்குற பொண்ணுங்க எல்லாம் சேட்டகாரிங்களாத்தான் இருக்காங்க, எனக்கு தெரிஞ்ச வரைக்கும்.)
காலனியில நிறைய பசங்க கார்ட், ரோஸோட அவ பின்னாடி சுத்துனாங்க. எங்க குருப்புல என்னத்தவுற எல்லாரும் அவகிட்ட பிலிம் விட பாத்து, தோத்தவனுங்க. ஆனா, அவ விட்ட நக்கல்ல எல்லா பயல்களும் தலைவி(தி)யேன்னு சரண்டர் ஆயிட்டாங்க‌‌.

நாங்க இருந்த தெருவில தான், அவ வீடு. அதுவுமில்லாம, எங்க குருப்பு பசங்க ரெண்டு பேரு, காலேஜ்ல அவ லேப் பார்ட்னர்ஸ். இவனுங்க நல்ல பேரு வாங்குறதுக்காக போட்டி போட்டு அந்த தெய்வத்துக்கு சமமா உண்ம பேசுனதுல; எங்க கொள்ளுத்தாத்தாங்க கம்மங்காட்டுக்கு போனதுல இருந்து இன்னைக்கு எவனுக்கு கான்ஸ்டிபேஸன் பிரச்சன இருந்தது வர, அவ எங்களபத்தி up to date ஆ இருப்பா.
காலனி பேக்கரில எங்க குருப்பு இருக்குறத பாத்து அவ வந்தான்னா,
நா அந்த இடத்தவிட்டு எப்படியும் எஸ்ஸாயிருவேன்.
நா அவகிட்ட பேசாததுக்கு ஒரு காரணம் இருந்திச்சு.
ஏதோ ஒரு ரிட்டையர்ட் பாட்டிக்கு ஒரு நாள் நா ஹெல்ப் பண்ண, அத பாத்து காலனியே என்ன யோக்கியன்னு என் பெர்மிஸன் இல்லாம, அவுட்ரைட்டா declare பண்ணிருச்சு. காலனியே, “யோக்கியன் கம் ஹியர், யோக்கியன் சாப்டாச்சா”னு என்கிட்ட பேசாததுதான் கொறச்சல்.
ஒரு நாள், என் காதுல படணும்னே மொக்க பிகர் ஒருத்தி, ப்ரியாட்ட, “இது சரியான அம்மாஞ்சிடி”ன்னு கமெண்ட் வேற அடிச்சி சிரிச்சா…….
இந்த காலகட்டத்துல, உண்மவிளம்பிங்கள்ள ஒருத்தன் என் கவித/கத நோட்ட‌ ஒரு நாளு எடுத்துகிட்டு போய், ப்ரியாகிட்ட கொடுத்திட்டான். எங்க நாம மாட்டுணோம்னா “இதெல்லாம் கவிதயா/கதையா. கவிதையில என்னா feelingsuuuuu”ன்னு பப்ளிக்ல ரேக்கு ரேக்குனு ரேக்கிடுவாளோன்ற பயம் தான், எனக்கு.
இப்படி நா பம்மிக்கிட்டு எஸ்கேப்பாகிட்டிருக்க, ஆனா, அவ என்னடான்னா,”இவ்ளோ நல்லா எழுதுறான்”, (அது என் கவித/கதய சொன்னாளா இல்ல ‌கையெழுத்த சொன்னாளோ), “எவ்வளவு அமைதியானவனா இருக்கான். Nice person” நு எதையோ சொல்ல, குருப்பு முழுசும் over night ல‌ சூனியம் வச்ச ஷாஜகான் “விஜய்” மாதிரி ஆகிட்டானுங்க.
அதோட ரிஸல்ட் தான் ஓப்பனிங்ல வந்த வார்னிங்/ஆர்ட்ர்.
எப்படியும் இந்த பேக்கரி வாசல்ல நம்ம மானத்த அவ வாங்க போறான்றது, confirmed. சேட்டக்காரி; அவளா வந்து பேசுனா, damage ஜாஸ்தியா இருக்கும். Risk எடுத்து நாமளே பேசிருவோம்னு முடிவு பண்ணேன்.
ஆனா, என்னத்த பேசுறது?
அதான் தெரியல.
உண்மவிளம்பிங்கள தெரியாம கேக்கப்போய், “ஒரு பேப்பர்ல குத்திட்டானுங்களேனு காலைலயிருந்து கடுப்புல இருக்கோம்….”னு அவனுங்க பைக் வீல எத்துனானுங்க. அவனுங்களுக்கு exam result பிரச்சன.
என்ன பேசுறதுன்னு வேற யோசிக்குறதுக்குள்ள,
அந்த பாழாப்போன காலேஜ் பஸ் வேற‌ வந்துரிச்சு.
முத ஆளா அவ இறங்கி, நேரா என்ன பாத்து வர ஆரம்பிச்சிட்டா…..
“பேசுடா, பேசுடா”னு கூட இருந்தவனுங்க உசுப்பேத்துற விட அரண்டு கிடக்குற உள்மனசு படபடக்க; அவள பாத்து, “ப்ரியா….”னு கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன்.
அந்த கணம் அவ முகத்துல ஆயிரம் பரவசம், பூரிப்பு, பெரும, சந்தோசம், வெட்கம் (என்ன!!!!!! இவளுக்கு வெக்கப்படத்தெரியுமா????) தெரிஞ்சது. ஆனா, சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா போனதுல, whole college bus, bakery, bus stopநு எல்லாரும் எங்களயே பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.
“அடப்பாவி, யோக்கியன் மாதிரி இருந்தவனா இவன்னு”, எங்க காலனி ஆளுங்க மொறைக்குறதப்பாத்து இன்னும் நா டென்ஷனாக‌,
“ஐயய்யோ, கூப்டுட்டோம், ஆனா அடுத்து என்ன பேசணும்ன்னு யோசிக்கலையே. சொதப்பிடாதடான்னு” உள்மனசு extraவா இன்னும் மிரட்ட,
இந்த குழப்பத்துல volumeம reduce பண்ணாம அப்படியே துணிஞ்சி
பேசிட்டேன், கத்திட்டேன்…….
“ப்ரியா, ரிசல்ட் வந்திருச்சில்ல, எத்தன அரியரு……..”
//பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.//
(Picture courtesy: inspeech.net/Scholarship/default.aspx)

Sunday, December 12, 2010

காலையில், காணாமல் போன….

எங்கே சென்றன‌ என்று தெரியவில்லை.
பல ஆண்டுகளாய் இருந்தது.
தினமும் இங்கேதான் கண்டோம், அனுபவித்தோம்.
ஆனால், இப்போது காணேம்.
இப்படியும் நடக்கக்கூடுமா என நான் மட்டும் அல்ல
என்னோடு நண்பர்களும் வியக்கின்றனர்.
எங்கள் ஊரைப்பற்றி நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்காக அருகில் இருக்கும் பெரு நகரத்தின் பெயர்
சொல்லிச்செல்லும் பழக்கமும் எங்களுக்கு இல்லை.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே நெசவுத்தொழிலை
நம்பியிருந்த‌ ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன் தான், எங்கள் ஊர்.
ஊரின் எல்லா தெருக்களும் அதிகாலையிலிருந்தே
மெல்ல மெல்ல சோம்பல் விடுத்து துயில் கலையும்.
பெண்களும் அதிகாலையிலேயே வாசலை
சுத்தம் செய்தால் தான் உண்டு. தாமதமானால்,
துணிகளை நெய்யும் முன், நூலில் பாவு போடுவதற்காக
தெருக்களின் இரு ஓரங்களிலும் ஆதியும் இன்றி அந்தமும் இன்றி
கட்டி விடுவார்கள்.
பெண்கள் வாசல் கூட்டி/பெருக்கி , தெளித்து, கோலமிட்டு முடிக்கும் வரை
திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டிருக்கும் சிறார்களின்
தலையாயிய கடமை, கையில் கொட்டப்பட்ட
கோபால் பல் பொடியோ அல்லது 1431 பயோரியா பொடியையோ
சுவைத்துக்கொண்டிருப்பது தான். பல் தேய்க்கும் கடமையை
முன்னமே செய்தவர்கள் வீட்டின்முன் ஓடும் சாக்கடையில்
காலைக்கடன்களை தீர்த்துக்கொண்டிருப்பார்கள்.
பெண்கள் தங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டே
இன்றைய கிழமை, நடுச்சாம கோடாங்கியின் வாக்கு,
சாணி தெளிப்பது, எத்தனை புள்ளி கோலமிடுவது
என பேசிக்கொண்டிருக்க; சிறார்களும் நேற்றிரவு
தூங்கும்முன் கேட்ட கதை, தூங்கும் பொழுது ஒண்ணுக்கு விட்டது,
எங்கிருந்தோ வந்த உடுக்கை சத்தம் என பேச்சு நீளும்.
சாக்கடையின் உள்ளேயே வந்து தாக்கும் பன்றிகளிடம் இருந்து
காலைக்கடன்களை பட்டுவாடா செய்துகொண்டிருப்பவர்களை காக்க
அவ்வப்போது கடன் தீர்த்த ஒரு ஆள் காவலுக்கு நிற்பதும் உண்டு.
அனேகமாக இந்த பட்டுவாடாக்கள், பெண்கள் தங்கள்
வாயிற்கடமையை முடித்து, “என்னடா முடிஞ்சிச்சா?” அல்லது
“இருந்தது போதும் வா” என அதட்டும் வரை தொடரும்.
இந்நேரத்தில், அடுத்த தெருவில் உழுந்தங்களி
விற்பனைக்கு தயாராகிக்கொண்டிருக்கும். ஒரு கிழவியும்
அவளின் விதவையான மகளோ/மருமகளோவின் ஜீவனத்திற்கு,
அவர்கள் வீட்டு திண்ணையில் செய்து கொண்டிருந்த
அந்த வியாபாரத்தை தான் நம்பியிருந்தனர்.
களி தயாராகிக்கொண்டிருக்கும் அடுப்பை
தண்ணீர் தெளித்து அணைத்து,
ஈர விரல்களினால் அந்த சாம்பலை தொட்டு,
களிச்சட்டியில் திருநாம பட்டையிட்டு,
வணங்கி, தினமும் விற்பனையை தொடங்குவாள் கிழவி.
கிழவிக்கு ஏதோ நம்பிக்கை. எங்களுக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது.
அது, வாங்கும் காசுக்கு அவளின் மகளையோ/மருமகளையோ விட
கிழவி எப்போதும் சிறிய உருண்டைகளே தருவாள் என்பது.
ஒரு கையில் நழுவும் டவுசரை இழுத்துக்கொண்டோ,
அல்லது ஒழுகும் மூக்கை துடைத்துக்கொண்டு
மறு கையில் வாழை இலையில் மடித்து தரப்பட்ட
சூடான உருண்டைகளை பத்திரமாக வீடு வந்து சேர்க்க வேண்டும்.
சில சமயங்களில், கல் இடறியதாலோ, கை தவறியோ உழுந்தங்களி
உருண்டைகள் மண் தெருவில் விழுந்துவிடும். அந்த இழப்புகளின்
வேதனையை இன்று வரை வேறு எதுவும் மிஞ்சியதில்லை.

அநேகமாக, விடிந்திருக்கும். இப்போது பாவு போட
ஆரம்பித்திருப்பார்கள். பாவு போட ஆரம்பித்திருந்தால் இனி அதை
அவிழ்க்கும் வரை வீட்டின் உள்ளே, வெளியே சென்று வர
பாதியாக மடங்கித்தான் செல்லவேண்டும்.
இதற்குள் பால்காரனும் வந்து சென்றிருப்பான். அவன்
வந்து சென்ற செய்தியை வாசற்படியில் சொட்டியுள்ள
பால் துளிகள் தெரிவிக்கும். திண்ணையில் அமர்ந்து,
வாங்கி வந்த உருண்டைகளை தின்று கொண்டிருந்தால்
ஒரு சிறிய சொம்பில் கருப்பட்டி காபி வரும். பால்,
பச்சிளம் குழந்தைக்கும், நோயுற்றோருக்கும் மட்டுமே கிட்டும்.
சில நாட்களில், அதுவும் கோடை காலங்களில்
தெருவில் அந்நேரத்தில் பதனீர் வரும்.
உருண்டையோ, காபியோ இல்லாத காலையை பதனீர் ஈடுகட்டும்.
காலைகடனுக்குச் சென்ற ஆண்கள், தோளிலே அன்ட்ராயருடன்
வந்து கொண்டிருப்பார்கள். சிலிர் அதை (பட்டாபட்டி என்றால்
இன்று அனைவருக்கும் தெரியும்) சைக்கிள்
ஹாண்டில் பாரில் போட்டு,
சைக்கிளை தள்ளிக் கொண்டுவருவர்.
குளத்திற்கோ, பம்ப் செட்டிற்கோ குளிக்க சென்ற ஆண்கள்
இடுப்பிலே ஈர வேட்டியும், தோளிலே ஈரத்துண்டும்,
நெற்றியிலே பிள்ளையார் கோயில் விபூதியுமாய்
திரும்பிக்கொண்டிருப்பர்.
டீ கடைக்கு செல்லும் ஜோடியும் அங்கிருந்து வரும் ஜோடியும்
(ஜோடி என்றால் இருவர். இன்று இதன்
அர்த்தம் mixed doubles ஆகி விட்டது),
நடுத்தெருவில் நின்று சிறிது நேரம்
செய்தி ப‌ரிவர்த்தனை செய்து கொள்ளும்.
பாவு போடாத நாட்களில், வீதி வழியே போகும் மாடுகளோ,
பருத்திமார் விற்க வரும் வண்டி மாடுகளோ இடும் சாணி
உடனே அப்புறப்படுத்தப்படும். தெருவில் யார் வீட்டு வாயிலின்
அருகே சாணம் உள்ளதோ அது அவர்களுக்கே சொந்தம்
எனும் புரிதல் ஒப்பந்தமும் சமயத்தில் மீறப்பட்டு அதனால்
ஏற்படும் பெண்களின் வாக்குவாதங்கள்,
டீ கடை செல்லும் ஆண்களால் சமாதானப்படுத்தப்படும்.
இப்போது, இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகளில்
இருந்து நெசவுத்தறி ஓசை தெருவில் கேட்க ஆரம்பிக்கும்.
அடுத்து, வீதியில் மோர்காரி வரும் வரை சிறிது நேரம் கிட்டும்.
அது வரை கோலிகுண்டோ, பம்பரமோ,
கிட்டிப்புள்ளோ, டயரோ ஆடலாம்.
ஆனால், மோர்காரி விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
ஏதோ அவசரம் போல் கூவிக்கொண்டே ஓடுவாள்.
5 காசுக்கு ஒரு சொம்பு மோர் கிடைக்கும். அதனுடன் சேர்க்கும்,
5 பைசாவிற்கு கிட்டும் ஒரு கரண்டி தயிர் காலையில்
எனாமல் தட்டிலும், மதியம் ஈயத்தூக்கிலும் உள்ள
பழைய சோற்றிற்க்கும் இனிய மனம் சேர்க்கும்.
அடுப்படியில், பாத்திரம் தேய்க்கும் மூலையில்
ஜல்ஜாரி அருகே ஒரு சிமெண்ட் தொட்டியில்
(உண்மையில், சிமெண்ட்டால் செய்த அண்டா அது) இருக்கும்
நீரைக்கொண்டு, அங்கேயே நின்று கொண்டு
சீயக்காய் பொடி / லைப்பாய் சோப்
மணக்க குளிக்கலாம்.
துவட்டிவிட்டு வந்து கொடியில் தொங்கும் பள்ளி சீருடையான
வெள்ள சட்டை, காக்கி டவுசர் மாட்டுமுன், சட்டைக்கு ஊக்கும்,
டவுசரின் பட்டைகள் அறுந்து விடும் நிலையிலும் உள்ளனவா என உறுதி படுத்திக்கொள்ளுதல் முக்கியம்.
அந்த டவுசர் எங்கள் இடுப்பில் நிற்காது, அந்த பட்டைகளினால்,
எங்கள் தோள்களிலிருந்து தான் தொங்கி மானம் காக்கும்.
பக்கத்து வீட்டு திண்ணையில் இயங்கும்
பெட்டிகடையில் வாங்கிய “மட்ட ஊறுகா”யினால்
காலையில் கிட்டும் பழைய சாதம் சுவைக்கிற‌தா அல்லது
இதனால் அது சுவைக்கிறதா என்ற வியப்பு தினமும் நிகழும்.
ஹார்லிக்ஸ் பாட்டிலில் உள்ள தேங்காயெண்ணயய்
சாதுர்யமாக கையில் ஊற்றி தலையில் தடவி,
எண்ணெய் தோய்ந்த ஆனால் அழுக்கே இல்லாத சீப்பால் சீவி,
பான்ட்ஸ் பொளடரை முகத்தில் அப்பி, சாமி மூலையில் நின்றால்,
நெற்றியில் திருநீர் மற்றும் சாந்து பொட்டு இட்டு, கையில் அவ்வப்போது
ஏதாவது காசு தருவார்கள்; 2 பைசா, 3 பைசா அதிகபட்சமாக 5 பைசா என்று.
பள்ளிப்பையை, பெரும்பாலும் அது VSS ஜவுளி ஸ்டோர்
என சிவப்பு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் பை;
எடுத்துக்கொண்டு வீதியில் நடந்தால்,
இங்கொன்றும் அங்கொன்றுமாய் ரேடியோ ஒலித்தாலும்
பள்ளி வரை பாடல்கள் இடைவிடாது தொடரும்.
பயணம் தொடரத்தொடர விரியும் நட்பு வட்டம்.
ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பிரத்யோகமாக
தெருவிற்கு வரும் அந்த தறியின் ஒலி
வழி எடுத்துரைக்கும் “நல்லா படிக்கணும்” என்று.
பூக்கடை பஜாரை தாண்டும் போது அதன் பிரத்யோக
ரோஜா, சந்தன‌ம் மற்றும் ஜவ்வாது வாடைகளின் கலவை;
சிமெண்ட் தெருவில் நடக்கையில் வரிசையாக
டீ கடைகளில் இருந்து வரும் டீ மற்றும் வடை வாசனை,
நடைபயணத்தை மேலும் ரசிக்க வைக்கும்.
தெருவோர ஆக்கிரமிப்பில் முளைத்த மன்றங்களின்
உள்ளிருந்து கூட்டத்தோடு தெருவிற்கு வரும் அரசியல்.
பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர் துணையின்றி
தானே விரும்பி வரும் பிள்ளைகளை உள்வாங்கி
“அறி”வணைக்கும் அந்த கற்கோவில்.

வீட்டில் கிடத்த காசுக்கு காலை இன்டர்வெல்லில்
மனம் உலகையே விலை பேசத்துடிக்கும்.
இன்று ஒருவன் கலெக்டராய், சிலர் விஞ்ஞானியாய்,
சிலர் ஆராய்ச்சியாளனாய், சிலர் வியாபாரியாய்,
பலர் மருத்துவராய், பொறியியல் வல்லுனராய்
அதே ஊரின், அதே காலைகளில், அதே தெருக்களில்,
ஒவ்வொரு முறை ஊர் போகும் போதும் தேடுகிறோம்.
உன்னால், உங்களால் எங்கள் காலைகள்,
எங்கள் வாழ்க்கைகள் சிறப்புற்றன
என நன்றி சொல்ல…….
காணவில்லை……
உங்கள் ஊரிலேனும் பத்திரமாக உள்ளதா…?

(மீள்பதிவு) Picture courtesy:
weavers pic: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgn78A3D2V2JvAU5Mnzv8kCJ-OfpQH4X0S7JBeY0TH5iJW91JmSAue5vP-SUG0PXdCC30BVl1SBus_5CrY07h6J01KjS-5hIlrOlHeVizL0gAFJyRsYcKxjuyF1G1lulTKih9cg649iqJIF/s400/IMG_7422.jpg
school and children: http://cloud.globalgiving.org/pfil/5047/ph_grid7_5047_17376.jpg




Monday, December 6, 2010

காதலி எப்போது மனைவியானாள்..?



1. நீங்கள் டி.வி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்......
காதலி : என்ன பண்ற . வா ஷவருக்கு.
மனைவி : என்ன பண்ற (வாய்ஸ் மாடுலேஷன் வேற). போய் பாத்ரூம கழுவு.

2. ஒரு புதிய உடை உடுத்தியவுடன்....
காதலி : இந்த டிரஸ்ல "நா எப்டி இருக்கேன்"?
மனைவி : "இந்த டிரஸ்" போட்டா குண்டா தெரியுதா?

3. மாலில் swarovski  பக்கம் செல்ல அழைப்பு வருகிறது
நீங்கள் : எதுக்கு?
காதலி : ச்சும்மா. விண்டோ ஷாப்பிங்.
மனைவி: வேடிக்க பாக்க தான். கேட்டா மட்டும் வாங்கியா தர போறீங்க.

4. ஒரு விவாதத்தின் போது நீங்கள் வழக்கம் போல் புத்திசாலித்தனமாக பேச‌
காதலி : நல்லா தான் பேச டிரை பண்ற...
மனைவி : லூசாயா நீ.

5. ஒரு அழகான பெண்ணை பார்த்து விகல்பமாக 
நீங்கள் : அழகா இருக்கா இல்ல...
காதலி : ம்..இருக்கா......
மனைவி : உங்களுக்கு தான் தொப்ப தரய தொடுது, சொட்ட பின்னங்கழுத்த தேடுதே.....


நீதி: 
காதலி : நாகரீகமான டபுள், ட்ரிபுள் மினீங்
மனைவி : Hit the nail on the head and hard

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...