ஊரை பற்றிய நினைவுகள் தாயை பற்றிய நினைவுகள் போல. ஊரை பற்றிய பேச்சுக்களும், அவ்வாறே. “போ, போ நீ ஒரு பிள்ள பொறக்கவேயில்லன்னு நினச்சிக்கிறேன்”என்று தாயும் “போ, போ ஊருக்குள்ள நீ ஒருத்தி தான் சுமந்தியா” என்று பிள்ளையும் சண்டையிட்டுக்கொள்ளாத வீடு உலகத்தில் இல்லை. சண்டையிட்டு கொள்வதும் விட்டுக்கொடுப்பதும் சமாதானமாகி சேர்வதும்தான் வாழ்க்கை என்பதை தாய்பிள்ளை உறவில் தெரிந்துகொள்ளாதவர்கள் அதிகப்படியாக சண்டையிட்டு, வீடு துறந்து சமுதாயகுப்பைகளாகிறாகள்.
ஒரு விடுமுறை நாளின் பின் மதியத்தில், ஊரை கிழித்துச்செல்லும் ஓடையை இல்லை சாக்கடையை சிறு கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த வயதில் கூட்டம் எதற்காக இருந்தாலும் அதில் முன்னே நிற்பது வீரத்தின் வெளிப்பாடு. சாக்கடை ஓடைக்கு பல அடிகள் முன்னே கூட்டம் நின்றது. ஆர்வத்தில் முன்னே மேலும் ஒரு அடி வைத்தபோது ஒரு கை தலைமுடியை பற்றி பின் இழுத்து கூட்டத்தோடு நிறுத்தியது.
கூட்டத்தின் முன் நின்று பார்த்த போது….
ஓடையில் ஒருவன் கிடந்தான். என் போன்ற சிறுவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவன்; உடலில் பல வெட்டுக்களோடு. சினிமா தந்த சிற்றறிவினால், அவனை யாரோ சிலர் விரட்டி வந்து வெட்டியிருக்கின்றனர் என்று யூகிக்க முடிந்தது. உயிர்வெறி அன்றி அந்த சாக்கடை ஓடையில், இறங்கத்துணியும் காரணம் யூகிக்க முடியவில்லை.
சாக்கடையில் இருந்த ஓர் திட்டிற்கு தவள முயன்றான். தோற்றான். இரண்டு கால்களின் பின்தொடைகளும் கிழிந்து, இடது கை மணிகட்டு தோலினால் மட்டும் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்க, தலையிலிருந்து வழியும் ரத்தம் உறையாமல் கழுவிச்சென்ற ஓடை நீரை செம்மையாக்கிக்கொண்டிருந்தது.
பின்னால், மெதுவாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது; பரிச்சயமில்லா ஒர் அமைதியுடன். தலையில் தட்டி அவ்வப்போது “போ” என்று செய்கை செய்தனர் சிலர், வார்த்தை விடுத்து . சிறுவர்கள் இது போன்ற கோரங்களை பார்க்கவேண்டாம் என்று அக்கறை கொண்டனரோ அல்லது இவ்விடத்தில் இவர் தம் பகுத்தறிவு துளிர் விடவேண்டா என எண்ணினரோ.
சாக்கடையில் கிடந்தவன் அவ்வப்போது, ஹக்….ஹக்… என்ற சத்தத்துடன் சீரான இடைவெளியில் துடித்துக்கொண்டிருந்தான். பல ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்த சுப்ரமணியபுரம் என்ற படத்தில், சீட்டு கிளப்பில் கொலைசெய்யப்படும் ஒருவன் துடித்து அடங்குவதை சில வினாடிகள் திரையில் பார்த்து, வன்முறை அதிகமாக இருக்கு என்று உச்சு கொட்டியிருப்பீர்கள். வினாடிகள் அல்ல, நிமிடங்கள் அல்ல, மணி நேரங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம், அன்று ஊரே கூடி.
கட்டுப்படுத்த யாரும் இல்லை, ஆனால் சேரும் எல்லோருமே சேர்த்தனர், காத்தனர் அந்த அமைதியை. கையாலாகாத்தனம் வாரி, வளைத்து, நெருக்கி, இறுக்கும் போது அழுத்தமான அமைதி சுயதிணிப்பாகிறது.
கால் மணி, அரை மணி என்ற துண்டுகள் மறைந்து முழு மணி நேரங்கள் கடந்தன.
“வாங்கய்யா, ஆஸ்பித்திரிக்கு தூக்கிட்டு போவோம்…”, என்ற வாசகம் இறுதி வரை ஏக்கமாக முடிந்தது, எனக்கும். படங்களில் பார்த்தது போல் பொலிஸ் வரும் என்ற எதிர்பார்ப்பு எப்போது மறைந்ததோ. வேடிக்கை எண்ணமும் கறைந்து போய், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களாய், பசியோடு உடல் சோர்வும் சேர, கூடிய கூட்டத்தின் கால் வழி உள்புகுந்து, வெளிவந்தபோது சூரியன் மறைந்திருந்தது.
சாக்கடை கரையை தொட்டடுத்த அந்த வீட்டின் திண்ணையில் வாழ்ந்து வந்தாள் ஒர் குரூபக் கிழவி. தன் பிள்ளைகளின் தயையை எதிர் நோக்கி வாழும், அவர்தம் செயல்களின் மேல் ஆளுமையற்ற அந்தக் கிழவி தான் வாழும் திண்ணையில் அமர்ந்தபடி கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தனக்குத்தானே ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள் என்று தோணியது.
பின்விளைவுகளை பற்றி எண்ணாது, அடுத்தவரின் அவசரத்திற்கும், ஆபத்திற்கும் வரிந்துகட்டி கொண்டு கிளம்பும் பிள்ளைகளை தட்டி கொடுக்கும் தாய் இருக்கும் வரை எந்த பிள்ளையும் தைரியசாலி தான். “உனக்கேன்…”, என்ற அவளின் ஒற்றை சொல்லோடுதான் ஒவ்வொறு தெருவும் ஒவ்வொறு ஊரும் மனிதம் இழக்கிறது; மயானம் நகரினுள் விஸ்தரிக்கிறது.
சொந்த ஊரின் பெருமைகள் தாயின் பெருமைகள் போல். என்ன சொல்ல…..
No comments:
Post a Comment