Monday, November 29, 2010

வியர்வைப்பூ பூத்த மதியம்…

விடுமுறை நாட்களை விட பள்ளி நாட்களின் மதியங்கள் ரசமானவை.


பள்ளி திண்ணையில் அடுக்கப்படும் சத்துணவின் வாசனை, ஜன்னல் வழி தெரிவிக்கும் மதிய இடைவேளைக்கு சில நிமிடங்களே என்று. உணவு இடைவேளையில் உணவுண்ணும் காலம் குறைவானதே. குறைவானது உணவுண்ணும் காலம், நிறைவானது உணவின் சுவை.


அபூர்வமாய் வரும் கறி சோற்றுடனோ, கோழி குழம்புடனோ தவறாது உடன் இருக்கும் சில "கரி"த்துண்டுகள்‍‍, வரும் வழியில் பேயோ, பிசாசோ உணவை திருடி தின்பதை தடுத்த அசதியில். தயிர் சோறா, பழைய சோறா யார் கண்டது வேற்றுமையை. ஆளுக்கு ஒரு கை.


தூக்குவாளியை கழுவுகிறேன், தட்டை கழுவுகிறேன் என்று பள்ளிக்கூட குழாயிலோ, அருகில் இருக்கும் கை பம்பிலோ, கிணற்றடியிலோ தண்ணீரில் ஆடிய ஆட்டத்தின் நினைவுகள் இன்றும் ஈரமானவை. "டேய், கொண்டாடா உனக்கு ஒழுங்காவே கழுவ தெரியாது. நான் தான் கழுவி தருவேன்", என்று தட்டை வெடுக்கென்று பிடுங்கும் வசந்தியும், "டேய், ப்ளீஸ்டா. எனக்கான்டி தண்ணி அடிச்சிக்கொடுடா", என புன்னகைத்து கெஞ்சும் ப்ரீயாவும் கடைசிவரை சொல்லாமலே விட்டுச்சென்ற உணர்வுகள் இன்று வரை சரியாக புரிந்து கொள்ளப்படாத ஏக்கங்களே. பெண் பிள்ளைகள் சீக்கிரமே மனமுதிர்ச்சி அடைகின்றனர் என்ற உண்மை அறியாமலேயே அந்த பருவம் கடந்து செல்கிறது. அவர்கள் பார்த்துக்கொண்டேயிருக்க "நா எறிபந்தாட போறேன். பொண்ணுங்கயெல்லாம் அதுக்கு சேத்தி யில்ல" என்ற வாக்கியமே இன்று வரை நினைவிற்கு வரும் முதல் ஆணாதிக்க வெளிப்பாடு.
 ‌
கிட்டிப்புல், கோலி போன்ற ஆட்டங்களும், வாத்தியார்களின் கழுகு கண்களுக்கு தப்பி அவ்வப்போது அரங்கேறும். இப்பமே ஒரு வீட்டுப்பாடத்த எழுதி முடிச்சா, போற வழியில இன்னும் ரொம்ப நேரம் ஆலஊஞ்சல் ஆடலாமே என்ற திட்டங்களும் ஒரு மனதாக நிறைவேறும்.






உணவு இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பமாகும் மணியடிக்க‌, வகுப்பின் உள் நுழைய ஆசிரியரோடு இடும் போட்டி பரம்பரைகள் கடந்தும் தொடரும் சம்பிரதாயம். அவசரமாய் இடம் தேடி அமர்ந்து புத்தகம் விரிக்கையில், ஜன்னல் வழி வரும் வேப்பமர தென்றல் காற்று, வேர்வைப்பூமாலை துடைத்து, ஆசுவாசப்படுத்தி, இதம் அளிக்கும்; சமயத்தில் இதம் தாண்டி தாலாட்டும்.


மதிய உணவு இடைவேளை நேரத்தை, அரிதாக, தவறவிட்டு தாமதமாக வந்து கை வலிக்க டப்பாவை தட்டிக்கொண்டிருக்கும் ஐஸ் வண்டிகாரனும், மதிய இன்டர்வெலிலாவது மிஞ்சியிருக்கும் வெம்பிய மாம்பிஞ்சுகளையும், காய்ந்த சீனிக்கிழங்கையும், பனங்கிழங்கையும் விற்று விட காத்திருக்கும் கிழவியும், எப்போதும் பீடி வாடை அடிக்க சற்று தள்ளி அமர்ந்திருக்கும் லக்கி பிரைஸ்காரனும், பல ஆண்டுகள் தினசரி பார்த்திருந்தும் சுயபரிச்சயமின்றி காரியக்கார உற‌வுகளாகவே தொடர்ந்தது,.......ஏன்?


இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதேனும் ஒரு கிராமத்து பள்ளியை க‌டந்துபோகையில் நியாபகத்திற்கு வரும் இவர்களின் நினைவில் பள்ளிக்குச் செல்லும் சிறார்களை இன்று காண்கையில் என்ன வரும் நியாபகத்திற்கு.



1 comment:

nis said...

பள்ளி பருவத்தை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள்

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...